பெரிய எதிர்க்கட்சி என்ற முறையில் அரசியல் களத்தில் மட்டுமல்ல சமூகக்களத்திலும் திமுகவுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.
இதுகுறித்த புரிதலுடன் வருங்காலத்தை திமுக அணுகவேண்டும். இன்று ஸ்டாலின் பாஜகவுடன் எந்த கூட்டணியும் இல்லை என வெளிப்படையாக அறிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கும் விஷயம். அதே நேரம் காங்கிரஸ் பற்றிய திமுகவின் பார்வை என்ன? ஐமுகூட்டணியில் அங்கம் வகித்திருந்தாலும் அதற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் மக்கள் மீது திணித்த பொருளாதாராக் கொள்கைகள் மூலம் மக்கள் அதிருப்தியை சந்தித்தது. அதன் விளைவே பாஜக ஆட்சிக்கு வந்தது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எல்லா கட்சிகளும் அணிசேர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது. அதே பொருளாதாரக் கொள்கைகளை காங்கிரஸ் மீண்டும் கடைப்பிடிக்குமானால் மீண்டும் பாஜக வரவே அது வழிவகுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
எனவேதான் திமுகவின் காங்கிரஸ் பற்றிய விமர்சனப் பார்வை என்ன என்று நான் கேட்கிறேன். அந்த பொருளாதாரக் கொள்கைகளை திமுக கண்டிக்கா விட்டாலும் குறைந்தபட்ச விமர்சனத்துக்காவது உள்ளாக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். வெறும் உடனடித் தேர்தல். அதில் எதிரியை முறியடிப்பது என்றுவைத்துக் கொண்டால் அது ஒரு தெளிவான ஆழமான அக்கறையுள்ள அரசியல் அணுகுமுறையாக இருக்காது. தேர்தல்களத்தை விட்டு விலகவேண்டும் என்று சொல்லவில்லை. இந்த விமர்சனப்பார்வையுடன் அணுகுவதுதான் தொலைநோக்கில் மக்களுக்கு நன்மை செய்வதாக இருக்கும். இதுகுறித்த சுய ஆய்வுக்கு திமுக தன்னை உட்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆர்கே நகர் தேர்தல் முடிவால் திமுக செல்வாக்கு இழந்ததாக யாரும் சொல்ல முடியாது. மக்களிடம் தனிச்செல்வாக்குடன் இருக்கும் திமுக அன்றாட பிரச்னைகளுக்காக எப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தப்போகிறது?
இப்போது ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வை எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் திமுக போராட்டம் நடத்துகிறது. இது மாநில உரிமைகள் சார்ந்து திமுக நடத்தும் முக்கியமான போராட்டம். இதுபோல் மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றில் சாதி மதம் போன்ற பிரச்னைகளில் திமுக மவுனமாகவும் அடக்கியும் வாசித்திருக்கிறது. தேர்தல் அரசியலுக்காக இப்படிச் செய்யும் நிலைப்பாட்டில் இருந்து திமுக விலகிவரவேண்டும். அதன் மீது இருக்கும் எதிர்பார்ப்பில் இதைச் சொல்கிறேன். அதை நிராகரிக்க இதைச் சொல்லவில்லை. திமுக, தமிழ் மக்கள் மத்தியில் ஒதுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் ஊழல் பிரச்னை. இன்று நீதிமன்றத் தீர்ப்பால் விடுவிக்கப்பட்டாலும் இந்த தீர்ப்பு மட்டுமே கறையைக் கழுவிவிடும் என்று நினைக்ககூடாது. நிஜமாகவே ஊழலுக்கு எதிரான இயக்கமாக தன்னை அடையாளப்படுத்தவேண்டும். ஒரு காலத்தில் திமுக தமிழகமெங்கும் கிளைபரப்பியபோது தெருவுக்குத் தெரு படிப்பகங்கள் உருவாயின. அங்கு திமுக பத்திரிகைகள் மட்டுமல்லாமல் பொதுவான பத்திரிகைகளும் இருக்கும். வாசிப்புச்சமூகமாக உருவாக்க அண்ணா நினைத்தார். ஆனால் பின்னாளில் படிப்பகங்கள் மன்றங்கள் ஆயின. அங்கு அரசியல் பேசப்படாமல் ஊழலுக்கு வழிவகுக்கும் விஷயங்கள் பேசப்படுவதாக மாறிப்போனது அவலம். இதெல்லாம் மக்கள் மத்தியில் அந்நியப்படுவதற்கு வழிகோலின. ஊழலுக்கு எதிரான பிரச்சாரமாக இல்லாமல் நிஜமான செயல்வடிவம் கொண்டுவந்தால் திமுகவுக்கும் மக்களுக்கும் நல்லது. திமுக ஏற்கெனவே தொடங்கிய சமூக சீர்திருத்த இயக்கத்துடன் அதனோடு அரசியல் பயணம் இணைக்கப்படவேண்டும். கலைஞர் திமுகவை சமூக சீர்திருத்த இயக்கமாக மாற்றிவிடுவேன் என்று அவ்வப்போது சொல்வார் என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். இவற்றின் மூலமாகவே வெறும் தேர்தல் வெற்றிகளைத் தாண்டி எதிர்காலத்துக்கான திமுகவின் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியும்.
ஸ்டாலின் அடையும் வெற்றி என்பது வெறும் தேர்தல் வெற்றியாக மட்டும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இதைச் சொல்கிறேன்.
மார்ச், 2018.